திண்டுக்கல் தொகுதியில் 2006, 2011 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று சட்டப்பேரவையில் தனிமுத்திரை பதித்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி. தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் திமுக-வுடனான கூட்டணி, தொகுதி பங்கீடுகள் தொடர்பாகவும் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச் சட்டம் தேவை என்று நினைக்கிறீர்களா?
ஆமாம். பெண்களைக் காட்டிலும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பள்ளி - கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது இதற்கு முக்கிய காரணம். காவல்துறையும் குற்றவாளிகளை கைது செய்கிறது. ஆனால், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இருக்கும் நீதிமன்ற நடைமுறைகளில் பெரிய தாமதம் இருக்கிறது. எனவே சிறப்புச் சட்டம் கட்டாயம் தேவை.
சாதியப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என்ற தோழர்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது?
இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. மூன்று மாதங்களில் அந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இது ஒரு நல்ல நடவடிக்கை. அனைத்து மாவட்டத்திலும் சாதிய படுகொலைகள் நடக்கின்றன. தனி சட்டம் இருந்தால் தான் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க முடியும். இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சட்டம் வரும் என்று நம்புகிறோம்.
எஸ்ஐஆரில் தமிழகத்தில் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாக்குகள் பறிபோய் விட்டதாக திமுக நாடகமாடும் என பழனிசாமி சொல்கிறாரே..?
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதுவே, பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் வாக்காளர் நீக்கம் மிகவும் குறைவாக உள்ளது. எஸ்ஐஆர் என்பதே பாஜக-வின் திட்டமிட்ட சதி. இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த எஸ்ஐஆர் நடைமுறையில் எல்லாமே சரியாக நடந்துமுடிந்து விட்டதாக பழனிசாமி நினைக்கிறாரா? கள நிலவரம் அறியாமல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்துக்களின் வாக்குகளுக்காகத்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதாக்குகிறதா?
தெற்கே ஒரு அயோத்தி என்று சொல்லி திருப்பரங்குன்றத்தை குறிவைக்கிறார்கள். ஆன்மிகத்தை அரசியலுக்குப் பயன்படுத்த நினைக்கின்றனர். மதத்தை அரசியலுடன் இணைக்கின்றனர். இதற்கு அதிமுக ஆதரவு தருகிறது. தவெக உள்ளிட்ட பல கட்சிகள் கள்ளமவுனம் சாதிக்கின்றன. இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் முழுமைபெற்றதாகத் தெரியவில்லையே..?
நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா சட்டமாகிவிட்டது. ஆனால், அது எந்த ஆண்டு அமலுக்கு வரும் என்றே தெரியவில்லை. பெண்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வெறுமனவே இதை சட்டமாக்கியுள்ளனர். உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்து விட்டார்கள். ஆனால், சட்டம் இயற்றும் இடங்களிலும் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்.
திமுக-வை தீய சக்தி என்று விமர்சித்திருக்கிறாரே விஜய்?
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு கூட, மேடையில் ஏறி திமுக தான் தீய சக்தி என்று பேசுவது அவர் இன்னும் யதார்த்த அரசியலுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. திமுக தீய சக்தி என்றால் ஆர்எஸ்எஸ், பாஜக எல்லாம் என்ன சக்தி? அதைப்பற்றி அவர் வாயே திறப்பதில்லையே. ஜெயலலிதா பயன்படுத்திய வார்த்தையை விஜய் இப்போது பயன்படுத்துகிறார். ஆனால், அதே ஜெயலலிதாவையே மக்கள் பர்கூர் தொகுதியில் தோற்கடித்தார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. ஒரு ஆழமான, முதிர்ச்சியடையந்த, அரசியல் புரிதலுடனான பேச்சு அவரிடம் இருந்து இன்னும் வரவில்லை. ‘ஜனநாயகன்’ படத்துக்காக பேசிய வசனம் போல் தான் இருந்தது அவரது பெருந்துறை பேச்சு. பாஜக-வையும், ஆர்எஸ்எஸ்ஸையும் எதிர்க்காமல் அவர்கள் பக்கமாகத்தான் விஜய் நிற்கிறார்.
40 இடங்கள் கேட்கவும் தங்களுக்கு தார்மிக உரிமை இருப்பதாக தோழர் மு.வீரபாண்டியன் சொல்லியிருக்கிறாரே... மார்க்சிஸ்ட்களின் எதிர்பார்ப்பு என்ன?
கூட்டணிக்குள் எத்தனை சீட் வேண்டுமானாலும் கேட்கும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. அதன்படி நாங்களும் இம்முறை இரண்டு இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கு எங்களுக்கு உரிமை இருந்தாலும் கட்சியின் பலம், கடந்த காலங்களில் வென்ற இடங்களின் எண்ணிக்கையை வைத்து எத்தனை இடங்கள் என்பதை கூட்டணி முடிவு செய்யும்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேர்தல் செலவுக்காகத் திமுக-விடம் சிபிஎம் நிதி பெற்றதாக விமர்சனங்கள் எழுந்ததே... இது வழக்கமான ஒன்றுதானா?
இது ஊரறிந்த ரகசியம். தேர்தல் என்றாலே செலவு ஆகும். ஆனால், அதற்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்று அர்த்தமில்லை. தொண்டர்கள் களப்பணி ஆற்றுவதற்காகவே நாங்கள் திமுக-விடம் தேர்தல் நிதி பெற்றோம். அதையும் ஒளித்து, மறைத்து வாங்கவில்லை. நன்கொடையாகத்தான் பெற்றோம். இதற்குக் கணக்குக் காட்டிய பிறகும்கூட எங்களை விமர்சிக்கின்றனர். நாதக கூட திரள் நிதி என்ற பெயரில் நன்கொடை வாங்குகிறதே... தேர்தல் பத்திரம் மூலம் பாஜக வசூல் செய்யவில்லையா?
ஊரில் ஒருவர் நேர்மையாக இருந்தால் அவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற நோக்கில் எங்களை குற்றம்சாட்டுகின்றனர். ஊழலில் சிக்கிய கட்சிகள் கூட இதை அவதூறாக பரப்புவதால் தற்போது கூட்டணி தலைமையிடம் இருந்து நாங்கள் நிதி வாங்குவதில்லை.