இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
கும்பகோணம்: சுவாமி மலையில் நேற்று செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியது:
ரேஷன் கடைகளில் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களின் அளவு குறைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.
விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நிதிநிலை சீராகும்போது மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றலாம். அதற்கு முன்பு விவசாயிகளிடம் அதிகாரிகள் கடன் வசூலில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டப்படியான ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் வாக்களித்து அதிகாரத்தைத் தருகிறார்கள். அந்த அதிகாரத்தின் மீது ஆளுநர் ஏறி அமரக்கூடாது. தவெகவை நாங்கள் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம். அரசியலுக்காக மக்கள் அளித்த தீர்ப்பை மதித்தோம். எங்களுக்கு சோபாவும் வந்ததுமில்லை, கல்லாப்பெட்டியும் வந்ததுமில்லை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
மேகேதாட்டுவில் எவ்வளவு வலுவான அணையைக் கட்டினாலும், அந்த அணையை உடைத்துக்கொண்டு காவிரி தமிழ் மண்ணுக்குத் தான் வருவாள். காவிரியின் திசை தமிழ் நோக்கித் தான், டெல்டாவை நோக்கித் தான். அந்த இயற்கையின் விதியை மாற்றும் சக்தி, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.