சென்னை: மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தக் கூடாது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை, புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கிருந்து ஒரேயடியாக வெளியேற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு கவலைக்குரியது.
மேகமலை பகுதியில் 5,072 ஹெக்டேர் பரப்பை 4,601 பேர் ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 1,595 பேர் நிரந்தர வீடும், காடு சார்ந்த வாழ்வாதாரமும் கொண்டவர்கள், 233 பேர் தற்காலிக வீடும், காடு சார்ந்த வாழ்வாதாரம் கொண்டவர்கள், 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்கள் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தக்கூடாது. வறுமையிலும் வாழ்வாதாரப் பாதுகாப்பு இல்லாமல் காடுகளைச் சார்ந்து,தலைமுறை தலைமுறையாக வாழும் மக்கள் ஆவர்.
வன உரிமைகள் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை முழுமையாகக் கண்டறிந்து, சரிபார்த்து, அங்கீகரிக்கும் முன்பாக மக்களை வெளியேற்றுவது சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணிப்பதாகும்.
பழங்குடியினர் மற்றும் பாரம் பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை அல்ல. எனவே, தமிழக அரசு உடனடி யாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அனைத்து தனிநபர் மற்றும் சமூக உரிமைகளையும் முதலில் முழுமையாகக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டும். அதுவரை கட்டாய வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.