தமிழகம்

அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட இந்திய கம்யூ. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கைக்கு அருகே உள்ள கீழடியை ஆய்வு செய்து பல்வேறு அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில், தமிழர் நாகரீகம் வரலாற்றில் மிகவும் தொன்மையானது என்பதை, சான்றுகளோடு உறுதிப்படுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை 2023-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மிக நீண்ட உழைப்பின் பலனாக 982 பக்கம் கொண்டதாக இந்த அறிக்கை வெளியானது. வேதகால நாகரிகத்துக்கு முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியது என்பதை அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை உறுதி செய்திருந்தது. ஆனால், இந்த அறிக்கை வெளிவந்தால் மத்திய பாஜக அரசின் அறிவியலுக்கு புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என்பது உறுதி செய்யப்படும். இதையொட்டி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை திருத்தம் செய்யுமாறு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT