மு.வீரபாண்டியன்| சி.மகேந்திரன்
சென்னை: “தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன், மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்” என அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினரான சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர்.
சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
குறிப்பாக, கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழகத்தில் மிகச் சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயார் செய்திருந்திருந்தனர். அத்தகைய மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார்.
எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். அவர், தனது தவறுகளை திருத்திக்கொண்டு கட்சியுடன் தன்னை பொருத்திக்கொள்ள கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளாமல் தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.