தமிழகம்

தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசு தலையீடு: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மத்திய அரசின் அழுத்தத்தால் டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், 2 மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இவர்களுடன் மேலும் பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

          

அரசியல் சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நேர்மையாக, நடுநிலையாக தேர்தலை நடத்துவதற்கும் எதிரானது. மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச போக்குகளை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

தீர்ப்புக்கு வரவேற்பு: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு ஆகியவற்றில் ஆளுநர்களின் தலையீடு பற்றிய உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

‘ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் ஆலோசனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தண்டனை தளர்வு, மன்னிப்பு போன்ற அதிகாரங்கள் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்ல. அவை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியவை’ என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

இது ஜனநாயகம், அரசியலமைப்பு ஆட்சி மற்றும் மாநில உரிமைகளுக்கான ஒரு முக்கிய வெற்றி ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT