இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் சட்டப் பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை தி.நகரில் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: இந்த தேர்தல் அறிக்கையில் 47 தலைப்புகளில் 302 அம்ச செயல் திட்டத்தை முன்வைத்திருக்கிறோம். அதன்படி அனைத்து தொழில்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குதல், தனியார்மயப்படுத்தலை தவிர்த்து, பொதுத்துறை மின்வாரிய அமைப்பை வலுப்படுத்துதல், தொழில்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது நியாயமான இழப்பீட்டை வழங்குதல், ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி மையங்களை தொழில்துறையுடன் இணைத்து இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குதல், அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்குதல் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட வேண்டும்.
அதேபோல் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்காக ஆணையம் அமைத்தல், தென் மாவட்டங்கள், பின் தங்கிய மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25 ஆயிரம், நிரந்தர வேலை, பாதுகாப்பான பணி, ஒப்பந்த வேலை முறையை கைவிடுதல், பாசன வசதியை மேம்படுத்துதல் ஆகியவை வலியுறுத்தப்படும்.
சாதிய படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம், கல்வி, அரசு வேலைகளில் உள்ள ஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடித்தல், மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்தல், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்தல், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல், மீன்பிடி தடைகாலத்துக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம், அனைத்து மாவட்டங்களில் மது போதை மீட்பு மையங்கள், மதுவிற்பனையை படிப்படியாகக் குறைத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல், பழங்குடி மக்களுக்கு தனி நலத்துறை உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
20 நாட்கள் சுற்றுப்பயணம்: இதற்கிடையே, மு.வீரபாண்டியன் நாளை (ஏப்.2) முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். ராஜபாளையம் தொகுதியில் ஆரம்பித்து, ஏப்.3 கோவில்பட்டியிலும், ஏப்.4, 5-ம் தேதிகளில் சென்னையிலும் அவர் திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.
தொடர்ந்து ஏப்.6 செங்கல்பட்டிலும், ஏப்.7 திண்டிவனத்திலும் பிரச்சாரம் செய்கிறார். 20 நாட்களுக்கு பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ள அவர், ஏப். 20, 21 தேதிகளில் சென்னையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.