நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: கரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமல்லாமல், கணவன், மனைவிக்கு இடையேயான திருமண பந்த அமைப்பையும் வேரோடு அழித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை. சில தம்பதிகள் மூன்று மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில் கரோனா தந்த மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் விவாகரத்து கோரியுள்ளதாகவும் கருத்து.
தம்பதியர் விவாகரத்து கோரிய வழக்கு ஒன்றில் மனைவிக்கு இடைக்கால பராமரிப்பு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டுமென கணவருக்கு ஆலந்துார் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து, வழக்கில் தொடர்புடைய நபர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:
நீதிமன்றம் நிர்ணயித்த தொகை நியாயமானது; அதிகப்படியானதல்ல என்பதால், குடும்ப நல நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. எனவே, நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை, நான்கு வாரங்களுக்குள் செலுத்தும்படி கணவருக்கு உத்தரவிட்டார்.
மேலும், அந்த உத்தரவில் கடந்த மூன்று மாதங்களில், விசாரணைக்கு வந்த அனைத்து குடும்ப நல வழக்குகளும், உலகம் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 2019 முதல் 2022 வரையில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
95 சதவீத வழக்குகளில், தம்பதியினர் 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே ஒன்றாகவும், சில வழக்குகளில் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்திருப்பதும் தெரிய வருகிறது.
கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டிற்குள் முடங்கி இருந்தபோது, அவர்களின் நல்ல மற்றும் மோசமான குணங்களின் பக்கங்கள் வெளிப்பட்டதாகவும், எதிர்காலம் பற்றிய அச்சமும் அழுத்தமும், அவர்களின் திருமண உறவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியதும் தெரியவருகிறது.
கரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமல்லாமல், திருமண அமைப்பையும் அழித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தம்பதியினர் சில மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்திருந்தனர் என்பதையும், பெருந்தொற்று காரணமாக, அக்காலகட்டத்தில் அவர்கள் அசாதாரணமான சூழலை எதிர்கொண்டிருந்தனர் என்பதையும் கருத்தில் கொண்டு, இத்தகைய வழக்குகளை ஒரு தனிப் பிரிவாகக் கையாள வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.
இதை கருத்தில் கொண்டு, 2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த திருமணங்கள் தொடர்பாக, குடும்ப நல நீதிமன்றங்கள் அல்லது திருமண தகராறுகளை கையாளும் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விபரங்களை, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் சேகரித்து, அடுத்த விசாரணையின் போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த தரவுகள் அடிப்படையில், குடும்ப நல நீதிமன்ற வழக்குகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் உதவியைப் பெற்று, இந்த வழக்குகளில் வேறுபட்ட தீர்வை எட்ட முடியுமா என்று ஆலோசிக்கப்படும்.
இத்தகைய நடவடிக்கை, பல குடும்பங்கள் மத்தியில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, சுமூகமாக ஒன்று சேர பெரிதும் உதவும் என, இந்த நீதிமன்றம் உறுதியாக நம்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.