சென்னை: அதிமுக கொறடா தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அம்பாசமுத்திரம் எம்எல்ஏ-வாக தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கோரி பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக இசக்கி சுப்பையா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரி்ன் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.எல்.ரவி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி, எஸ்.ஆர்.ராஜகோபாலன் ஆகியோர், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 6 பேரிடமும் விசாரணை நடத்தி அதில் திருப்தியடைந்த பிறகே அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த சில மணித்துளிகளில் அவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர்” என வாதிட்டனர்.
பேரவைத் தலைவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன், “ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் போய்விடாது. ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என தனது சுயவிருப்பத்தின் பேரில் அளிக்கப்படும் கடிதத்தை ஏற்க வேண்டியது பேரவைத் தலைவரின் கடமை. எம்எல்ஏ-க்கள் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா என்பதையும், குதிரை பேரம் நடந்துள்ளதா என்பதையும் தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு மீதான விசாரணையின்போதுதான் ஆராய முடியும்” என வாதிட்டார்.
ராஜினாமா செய்த 6 எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், மேனகா குருசாமி ஆகியோர், எம்எல்ஏ-வாக பதவியில் இருந்து சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, மாற்றுக் கட்சிக்கு ஆதரவளித்தால் அதுதான் ஊழல் நடவடிக்கை. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு இணைவது ஜனநாயகத்தில் நடைமுறையில் இருப்பதுதான். எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவுக்கும், தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.
சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்எல்ஏ-க்கள் சுய விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்காமல் இருக்க முடியாது, என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
எம்எல்ஏ-வாக நீடிக்க விருப்பம்: இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இசக்கி சுப்பையா தரப்பி்ல், தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், வழக்கி்ல் இறுதித் தீர்ப்பு வரும் வரை அம்பாசமுத்திரம் எம்எல்ஏ-வாக பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடந்த ஆக.28-ம் தேதி மனு அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து தீர்ப்பை தள்ளிவைத்துள்ளனர்.