மதுரை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காதது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று இன்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி நேற்று முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதிகளிடம், இதேபோன்ற பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு தரவேண்டும். உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வழிகாட்டுதலை தனி நீதிபதி பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து நடந்து 25 பேர் இறந்துள்ளனர்.
தேர்தல் காலம் என்பதால் விபத்து பகுதிக்கு அதிகாரிகள் செல்லவில்லை. இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கவில்லை.
எனவே நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சரியான வழிகாட்டுதல்கள் தேவை, இதுவரை ஏன் இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், இழப்பீடு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.