தங்க தமிழ்ச்செல்வன்
சென்னை: தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வனுக்கு சொந்தமான கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 2.48 லட்சத்தை இழப்பீடாக தங்க தமிழ்செல்வனும், காரை ஓட்டி வந்த அவரது மகளும் கூட்டாக சேர்ந்து வழங்க மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த கடந்த 2021 நவ.16 அன்று மாதவரம் 200 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே தேனி எம்.பி.தங்க தமிழ்செல்வனுக்குச் சொந்தமான காரை அவரது மகள் சாந்தி ஓட்டி வந்த நிலையில், அந்த கார் ஜெயக்குமார் மீது மோதியதில், அவர் படுகாயமடைந்தார்.
அதையடுத்து விபத்து இழப்பீடு கோரி ஜெயக்குமார் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி கே.எஸ்.ராஜேஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சாந்தி தனது சொந்தசெலவில் சிகிச்சை அளித்துள்ளார் என வாதிட்டனர்.
பதிலுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவனக்குறைவாக காரை ஓட்டி வந்ததால்தான் ஜெயக்குமார் படுகாயமடைந்து, சிறிது காலம் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாருக்கு தங்க தமிழ்செல்வனும் மகள் சாந்தியும் இணைந்து ரூ.2.48 லட்சத்தை 7.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.