மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் தொன்மையான சிலைகள் திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்ப கோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சுபாஷ் சந்திரகபூர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் 2011 முதல் சிறையில் உள்ளேன். தண்டனை காலம் 2022 அக்.31-ல் முடிவடைந்தது. அதையும் தாண்டி என்னை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர். மேலும் 6 வழக்குகளை நடத்த என்னை முறைப்படி இந்திய அரசிடம் ஒப்படைக்க ஜெர்மன் அரசிடம் போலீஸார் அனுமதி கோரினர்.
அதில் ஜெர்மன் அரசு முடிவெடுக்காததால் நிலுவையில் உள்ளது. என்னைச் சிறையிலிருந்து விடுவித்து ஜெர்மனிக்கே அனுப்ப மத்திய,மாநில உள்துறை செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, என்.குணசேகரன் அமர்வு விசாரித்து, மனுதாரரை 2 வாரங்களில் ஜெர்மனிக்கு அனுப்பிவைக்க மத்திய உள்துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.