உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: தமிழகத்தில் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதியவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கி கணக்குகளை முடக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
நெல்லை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்ததில் மிகப்பெரியளவில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு பெரியார் அறிவுலகத்துக்கான 2026-ம் ஆண்டின் கொள்முதல் உத்தரவுகளுடன் மட்டும் இல்லாமல் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரை நீள்கிறது. பல ஆண்டுகளாக முறைகேடு நடைபெற்று வருகிறது.
தவறிழைத்த அதிகாரிகள் மற்றும் மோசடி பதிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பொது நூலகத்துறை இயக்குநர் ஷஜீவனா காணொளியில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ’ 2024-ம் ஆண்டின் உயர் நீதிமன்ற உத்தரவை படித்தீர்களா? புத்தகம் எப்படி கொள்முதல் செய்யப்படுகிறது’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஷஜீவனா, ‘நான் இன்று (நேற்று) காலையில்தான் பொறுப்பெற்றேன். தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக அரசும், லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், ‘கொள்முதல் செய்யப்படும் புத்தகங்களை பரிந்துரைப்பது யார்? புத்தகங்களை அங்கீகரிப்பது யார்? கொள்முதல் உத்தரவுகளில் கையெழுத்திட்ட அதிகாரிகள் யார்? என்ற விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தீவிரமானது. தீவிரம் கருதியே பொது நூலகத்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது’ என்றனர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘கொள்முதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘முந்தைய உத்தரவிலேயே முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளது. அப்படியிருக்கும்போது ஏன் இதுவரை வழக்குப் பதியவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று கூறி வழக்குப் பதிவு செய்திருக்கலாமே. அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரின் வங்கி கணக்குகளை முடக்காமல் வைத்திருப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள், ‘2024-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் இந்த மோசடியைத் தடுத்திருக்கலாம். உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அவமதிப்பு செய்துள்ளனர். ஆட்சிகள்தான் மாறுகின்றன. அதிகாரிகள் அப்படியேதான் உள்ளனர். இந்த மோசடியை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம் தயாரித்துள்ளனர். ஏஐயை பயன்படுத்தி போலி புத்தகங்களை தயாரித்துள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
எனவே, இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நடந்த புத்தகக் கொள்முதல் தொடர்பான அனைத்து விவரங்களையும், கொள்முதல் செய்த அதிகாரிகளின் பட்டியலையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும். அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரின் வங்கிக் கணக்குகளை உடனே முடக்க வேண்டும். விசாரணை நாளைக்கு (இன்று) ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு: புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து 'திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தரப்பில் வழக்கறிஞர் ஏ. தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியே கொண்டு வந்துள்ளார்.
அரசு அமைத்த 112 பேர் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி சுமார் 60,266 புத்தகங்கள் அறிவுலகத்துக்கு புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அகல் விளக்கு பதிப்பகம், ஃபீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுகிறது.
இந்த புத்தகங்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் யார், புத்தகங்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டதா, ஆசிரியர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட்டதா, புத்தகங்களின் தரம், எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டதா, பதிப்பகங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, புத்தக விலை நியாயமானதா, த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி என்ற பெயரில் உண்மையிலேயே எழுத்தாளர்கள் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் கடந்த 7-ம் தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, ஊழல் தடுப்புச் சட்டம், பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த ஆவணங்கள், கோப்புகளை உடனடியாக கைப்பற்றி பத்திரப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.