அஜித்குமார், நிகிதா
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக தனிப்படைக் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தனிப்படைக் காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “செய்யாத குற்றத்துக்காக ஒருவரை போலீஸார் அடித்தே கொலை செய்துள்ளனர். போலீஸாருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை காவலர் சிறையிலேயே இருக்கட்டும்” என்று கூறி, “பொய் புகார் அளித்த பெண் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என சிபிஐயிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அஜித்குமார் காவல் மரண வழக்கை விசாரித்துவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி விசாரித்து, மார்ச் 4-ம் தேதி நிகிதாநீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.