சென்னை: மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஏப்.7-ல் இறுதி விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ள தாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ளத்தக்க ஆதாரங்கள் இருப்பதால் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி அதிமுக வழக்கறிஞரணி துணைச் செயலாளர் இ.சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி: இந்த வழக்கில் டான் ஜெட்கோ தரப்பி்ல், ‘மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு அரசுக்கு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மின்மாற்றிகள் கொள்முதல் மூலமாக ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பி்ல், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டரீதியாக அரசின் ஒப்புதலை பெற்று ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பதிலுக்கு மனுதாரர்கள் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை என்ற பெயரில் இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் ஏப்.7-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்து விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.