அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையைச் சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பன் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாயார் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகிய 5 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே கருப்பாயி அம்மாள் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி, போலீஸார் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து இன்று உத்தரவிட்டார்.