இடது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா
வட தமிழகத்தை நெருங்கும் ‘டித்வா’ புயல்: நவ.28, 29-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் டித்வா புயல் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் நாளை (நவ.28) நான்கு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (நவ.29) ஆறு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டித்வா புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் சென்னையிலிருந்து 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை 30-ம் தேதி அதிகாலை நெருங்கும்.
இந்தப் புயலின் காரணமாக அடுத்த 4 தினங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக 5 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
டெல்டாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை திருவாரூர், நாகப்பட்டினம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.29) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் (மிக கனமழை) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.27) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
