மனைவி மாலதி | கணவன் அருண்குமார்
ஆவடி: சென்னை, கொரட்டூர் அருகே பாடியில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கொரட்டூர் அருகே உள்ள பாடி, படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (41). இவரது மனைவி மாலதி (38). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே குழந்தை இல்லாததை காரணமாக காட்டி அருண்குமார் கடந்த 3 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததால், மாலதி வீட்டில் தையல் இயந்திரம் மூலம் துணி தைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
அதே நேரத்தில், குழந்தை இல்லாததாலும், போதிய வருமானமில்லாததாலும் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் அருண்குமார், மாலதி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததையும், வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததையும் அக்கம் பக்கத்தினர் அறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், கொரட்டூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, அருண்குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாலதி கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் சடலமாக கிடந்ததும், அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அருண்குமார், மாலதி ஆகிய இருவரின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வீட்டில் மாலதி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
அதில் மாலதி, “குழந்தை இல்லாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் எங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை. இதனால் கணவர் அருண்குமார், என்னைக் கொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறார். எங்கள் உயிரிழப்புக்கு யாரும் காரணம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாலதி கொலை, அருண்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.