சென்னை: உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப்-ல், வந்தே பாரத் ரயில், எல்எச்பி என்னும் நவீன பெட்டி ரயில், ஏசி மின்சார ரயில், மெட்ரோ ரயில் உட்பட பல்வேறு ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வந்தேபாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. அந்த வகையில், வந்தே பாரத் சரக்கு ரயிலை வடிவமைத்து, தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சரக்கு ரயில் வடிவமைப்புக்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப்-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அண்மையில் வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிப்பு பணி முழுமையாக நிறைவடைந்தது.
16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உணவு பொருட்களை பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதி போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்த ரயில், ஐசிஎஃப்-ல் இருந்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பால் (ஆர்டிஎஸ்ஓ) முழு சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து, ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: பெரிய நகரங்களில் சரக்கு ரயில் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அதிகரித்துள்ளது. அதுபோல, உணவு பொருட்கள் கையாள்வதும் அதிகரிக்கிறது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள், தங்கள் பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு தற்போது பெரிய அளவில் விமான போக்குவரத்தை நம்புகின்றன. இந்த வணிகத்தில், வந்தே பாரத் சரக்கு ரயில் சேவை ஈடுபடுத்தப்பட உள்ளது.
ஒரே நேரத்தில் 264 டன் சரக்குகளை இந்த ரயிலில் எடுத்து செல்ல முடியும். உள்பகுதி முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் வடிவமைப்பு, தீ எச்சரிக்கை வசதி, சிசிடிவி கேமரா, சரக்கு கன்டெய்னர்களை லாக் செய்வதற்கு வசதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ரயிலின் சோதனை ஓட்டம் குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன்பு, ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பால் (ஆர்டிஎஸ்ஓ) முழுமையாகச் சோதிக்கப்படும்.
இதற்காக, சென்னை ஐசிஎஃப்-ல் இருந்து மத்திய பிரதேசம், கஜூராஹோ வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய பிரசேதம் - ராஜஸ்தான் இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். இது தவிர, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இந்திய ரயில்வே கட்டமைப்பில் வழக்கமாக சரக்கு ரயில்கள் மணிக்கு 100 கி.மீ.க்கும் குறைவான வேகத்திலேயே இயங்கும். ஆனால், இந்த ரயில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் வாய்ந்தது.
நாட்டின் மிகவும் பரபரப்பான சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான டெல்லி என்சிஆர் - மும்பை மண்டலங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.