சென்னை: ‘‘லஞ்சம், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதுதான் முழுமையான சுதந்திரம்’’ என்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி தனது சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்வர் பதவியேற்றப் பிறகு கோட்டையில் முதல்வர் விஜய் முதல் முறையாகத் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும்.
அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்து ஒன்று சேருவார்கள். அவ்வாறு ஒன்று சேரும் இடத்தில்தான் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய அனைத்தும் உடைந்து நொறுங்கும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படிதான் மகாத்மா காந்தி தலைமையில் 1947-ல் இதே நாளில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அதைப் பின்பற்றி படிப்படியாக நாம் முன்னேறி வருகிறோம்.
தற்போது தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய ஒரு விடுதலைக்குச் சமமான விஷயம்தான். அதை நோக்கிதான் நமது அரசும் செயல்பட்டு வருகிறது. பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது.
மக்கள் நலன்தான் முக்கியமானது. அந்த அடிப்படையில்தான் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில், மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம். அதேவேளையில், மாநில உரிமைகளுக்கும், தமிழகத்துக்கும் எதிரான கொள்கை முடிவுகளை தவெக அரசு கடுமையாக எதிர்க்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
நல்ல திட்டங்கள் தொடரும்: முந்தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகம்’ திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இதுதவிர ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். அதன்படி விவசாயிகளின் ரூ.5,932 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ரூ.134 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் ரூ.755 கோடியில் தொடங்கப்பட உள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்படுவதுடன், கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம், சிலருக்கானதாக மட்டும் இல்லாமல் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகவும், 2036-ம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராகவும் உயர்த்த நாம் உறுதி ஏற்போம். மக்கள் அரசோடு இணைந்து நிற்க வேண்டும். மக்கள்தான் ஆட்சியாளர்கள். நான் உட்பட இங்குள்ள அனைவரும் மக்களின் சேவகர்கள்தான். அரசுக்கு எதிரான சதிகளை முறியடித்து, நல்லதை மட்டுமே நோக்கி நகர்வோம்.
ஊழலற்ற அரசை உருவாக்கும் பணிகளை நாங்கள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறோம். ஊழலைச் சிறிதும் சகித்துக் கொள்ளாத மனநிலையை நம் மக்கள் கொண்டிருக்க வேண்டும், நமது மாநிலத்தை ஊழலற்றதாக மாற்றுவதற்கு அதிகாரிகள், மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
இதையடுத்து, தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்கினார். விருதாளர்களுடன் குழுப் புகைப்படமும் முதல்வர் விஜய் எடுத்துக் கொண்டார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். விழாவை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிய முதல்வர் விஜய், சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றபடியே பொதுமக்களைப் பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே கையசைத்து சென்றார்.
சுதந்திர தின சிறப்பு அறிவிப்புகள்: தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது சுதந்திர தின உரையில் பேசும் போது 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர், என்.ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நடிகை த்ரிஷா பங்கேற்பு: சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா, தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் பங்கேற்றார். மஞ்சள் புடவையில் வந்த த்ரிஷாவுக்கு, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் முதல் வரிசையில் முதல்வர் விஜய்யின் பெற்றோருக்கு அருகிலேயே இருக்கை தரப்பட்டிருந்தது. மேலும், முதல்வர் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா மற்றும் குடும்பத்தினரும் விழாவில் கலந்து கொண்டனர்.