சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட 600 முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் விபத்துகளின்றி சீரான போக்குவரத்துக்காக இந்த சந்திப்புகளில் உள்ள சாலை வளைவுகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகளும், 5,653.89 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நெரிசல் குறையும்
மாநகராட்சி சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி பேருந்து தடச் சாலைகளை இணைகின்றன. இவ்வாறு இணையும் சாலை சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்தை எளிதாகும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 94 சாலைகள்
அதன்படி, இந்த சாலை சந்திப்புகளை போக்குவரத்து மேலாண்மை வழிகாட்டுதலின்படி திருத்தியமைப்பதன் மூலம் சந்திப்புகளில் அமைந்துள்ள வளைவுகளில் வாகனங்கள் எளிதாகவும் வேகமாகவும் செல்ல இயலும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தடுக்க இயலும். மேலும் பாதசாரிகள் அச்சமின்றி பாதுகாப்பாக நடப்பதற்கும் வழிவகையாக உள்ளது.
முதற்கட்டமாக முக்கிய பிரதான சாலை சந்திப்பு வளைவுகளில், 94 சாலை சந்திப்பு வளைவுகளை மேம்படுத்துவதற்கு ரூ.3 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ஈ.வெ.ரா. சாலையில் டெய்லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை, வாசு தெரு, அழகப்பா சாலை, டாக்டர் நாயர் சாலை, எம்.கே.பி. நகர் சாலை சந்திப்பு மற்றும் வேப்பேரி சாலை ஈ.வி.கே. சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிகள் ஜூலை 15-ம் தேதிக்குள் முடிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, 600 சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தும் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.