மனமகிழ் மன்றங்களின் உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

மனமகிழ் மன்றங்களின் உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மனமகிழ் மன்றங்களின் உரிமத்துக்கான சிறப்பு கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை விற்பனை மது கடைகளை நடத்தி வருகிறது.

இவைதவிர, கிளப் என்று கூறப்படும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளிலும் அங்கு வரும் விருந்தினர்களுக்கு மது விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த மனமகிழ் மன்றங்கள், விடுதிகள் டாஸ்மாக் நிர்வாகம் வாயிலாகவே மதுபானம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியும். இந்த மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்.

முன்தேதியிட்டு அமல் இந்நிலையில் மனமகிழ் மன்றங்களுக்கான எஃப்.எல் 2 உரிமம் பெறுவதற்கான சிறப்பு கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தி, தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது, மனமகிழ் மன்றங்களுக்கான உரிமத்துக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.10 ஆயிரம், உரிமக் கட்டணம் ரூ.30,000 என இருக்கும் நிலையில் அதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

சென்னை நகர் பகுதியில் உரிமத்துக்கான சிறப்பு கட்டணம் ரூ.15 லட்சமாகவும், மற்ற பகுதிகளுக்கு ரூ.10 லட்சமாக இருந்த நிலையில் தற்போது சென்னை நகர் பகுதிக்கு உரிமத்துக்கான சிறப்பு கட்டணம் ரூ.30 லட்சமாகவும், மற்ற மாநகராட்சிகளில் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.25 லட்சமும், மக்கள் தொகை 10 லட்சத்துக்குள் இருந்தால் ரூ.20 லட்சமும், நகராட்சிகளில் ரூ.15 லட்சமும், மற்ற இடங்களில் ரூ.10 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘இந்த கட்டண உயர்வு, முறையின்றி இயங்கும் மனமகிழ் மன்றங்களை முடக்கும்’ என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனமகிழ் மன்றங்களின் உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in