சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னையில் ரூ.150 கோடி செலவில் 160 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கு முன் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தட சாலைகளும், 565.89 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2026-27 நிதியாண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 360 கி.மீ. நீளமுடைய பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், மாநகராட்சியில் முதல்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கி.மீ. நீளத்திலான சாலைகளை ரூ.150 கோடியில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன் சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.