

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதல்வர் விஜய் இன்று (செப். 25) தொழுப்பேடு பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பல்வேறு அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று தவெக வேட்பாளருக்கு ஆதரவாக தொழுப்பேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்காக அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 30 ஏக்கர் இடம் வாகன நிறுத்தத்துக்கும் மீத முள்ள இடம் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பங்கேற்கும் கூட்டம் மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, போலீஸார், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார்.