தமிழகம்

ரூ.36,968 கோடியில் 71 தொழில் முதலீட்டு திட்டங்கள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தொழில்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்த செயலாக்க மாநாடு

செய்திப்பிரிவு

சென்னை: தொழில்துறை சார்பில், சென்னையில் நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன.

          

இவ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் - தொழில் முனைவோர்,தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக, தமிழகம் இருக்கிறது. நாங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே, அதற்காக ஒரு ‘டேஷ் போர்டு’ உருவாக்கிடுவோம். அதை நானே மானிட்டர் செய்வேன்.

திட்டம் வரும் மாவட்டம், நிலம், அனுமதி உள்ளிட்டவற்றை ‘பாலோ’ செய்வோம். திறந்து வைக்கின்ற வரை, எங்கள் வேலை முடியாது.எல்லாம் முடிந்தால்தான் டேஷ்போர்டில் அதை முடித்து வைப்போம். ஒரு நிறுவனம் தொழில் தொடங்க தேவையான, இயற்கைவளமும், தரமான மனித வளமும் இங்கே இருக்கிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சி போய் சேரவேண்டும் என்று, கடந்த 5 ஆண்டுகளில், சிப்காட் நிறுவனம் மூலம் 55,278 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 38 மாவட்டங்களில் 35-ல் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நீலகிரியில் சுற்றுலா முதலீட்டுப் பூங்காஅமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தொழில்துறை என்று மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும், கடந்த ஆட்சியில், போடப்பட்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடாமல், எந்த பாகுபாடும் பார்க்காமல், ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றியிருக் கிறோம். சாதனைகளைச் செய்யும் எங்கள் திராவிட மாடலுடன் சேர்ந்து, உங்களுடைய பய ணத்தை தொடருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் டி.ஆர்பி.ராஜா பேசும்போது, ‘‘கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை மேற் கொள்ளப்பட்ட 1,179 ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இது 73.53 சதவீதமாகும். இதில் 35.11 சதவீதம் ஒப்பந்தம் தொடர்பான தொழிற்பிரிவுகள் உற்பத்தியை தொடங்கியுள்ளன’’ என தெரிவித்தார். இந்நிகழ்வில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT