தமிழகம்

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்ற நிலையில் அநாகரிகமாகவும், ஒருமையிலும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தோல்வி அடைந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதே போல், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் நேற்று பங்கேற்றன. தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், கூட்டணியும் உடைந்ததால் திமுக கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றது குறித்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “முன்‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு: இந்த பதிவு விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பதிவை ஆ.ராசா நீக்கினார். இதனை தொடர்ந்து ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார் அதில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்று பதிவிட்டுள்ளார்.

விசிக பதிலடி: ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் வலைதளப்பதிவில், “அதிகாரம் எளியவர்க்கு - அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து - அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை” என்று ஒருமையில் மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT