சென்னை: போதைப் பொருட்கள், சட்டவிரோத மது விற்பனையை கண்காணிக்க பள்ளிகள், கல்லூரிகள் அருகே தொடர் சோதனை நடத்துவது குறித்து, மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையர் கார்த்திகா மாவட்ட ஆட்சியர்கள், ஆயத்தீர்வை துணை ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: போதைப் பொருள் கலாச்சாரம், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், போக்குவரத்து முனையங்கள் அருகே தொடர் சோதனை நடத்தி போதைப் பொருள், சட்டவிரோத மது விற்பனையை கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்கள், பெற்றோர், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் ரகசிய தகவல் வலையமைப்பை உருவாக்கி கள்ளச் சாராய தயாரிப்பு, விற்பனை பகுதிகளை கண்டறிந்து சோதனை நடத்த வேண்டும். கள்ளச் சாராயம் தயாரித்தல், கடத்தல், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, டாஸ்மாக், வனத்துறை, ரயில்வே காவல் துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக, டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றங்களில் திடீர் ஆய்வுமேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்ய கூடாது. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது. வெளி மாநில மற்றும் கள்ளச்சாராய விநியோகத்தை கட்டுப்படுத்தவேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மதுமற்றும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.