சென்னை: கல்வி சார்ந்த 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 25 நாட்கள் தொடர் மிதிவண்டி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை முக்கியம் என்ற இயக்கத்தின் சார்பில் 21-ம் நூற்றாண்டுக்கான கல்வி அறிக்கையை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் நேற்று வெளியிட்டு கூறியதாவது: குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கை நலனுக்காக 5 முக்கிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எங்கள் இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அதிக அழுத்தம் தரும், பயிற்சி மையங்களைச் சார்ந்த மாணவர் தேர்வு முறைக்குப் பதிலாக, மருத்துவக் கல்விக்கான நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய முறையை கொண்டுவர வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்டும், அறிவியல், ஜனநாயகம் மற்றும் சமூக, மக்கள்தொகை மற்றும் உலகளாவிய தேவைகளுக்குப் பொருத்தமான கல்வியை பாதுகாக்க வேண்டும்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும், தங்களது சமூக மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மைக்கு மிக நெருக்கமாக உள்ள மாநிலங்களே கல்வி அமைப்பையும் கல்விக் கொள்கையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
நீதிசார் பொதுக் கல்வியை வலுப்படுத்த வேண்டும், வறுமை அல்லது சமூகப் பின்னணி காரணமாக எந்தக் குழந்தையும் தரமான கல்வியை இழக்காத வகையில் பொதுக் கல்விக்கான அரசின் முதலீட்டைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
சமூகப் போதனையின் அடிப்படையில் கல்வியை உருவாக்கி, செயற்பாட்டு மனிதநேயத்தை நோக்கிச் செல்ல வேண்டும். விமர்சன ரீதியாகச் சிந்திக்கும், பாரபட்சங்களை எதிர்க்கும், சமூகத்தைப் புரிந்துகொள்ளும், உண்மையைத் தேடும் மற்றும் தனது வாழ்க்கையைத் தானே வழிநடத்தும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் 25 நாட்கள் தொடர் மிதிவண்டி பயணம் மேற்கொள்ள இருக்கின்றோம். வழியில் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி, மக்களின் ஒத்துழைப்புடன் இந்த 5 கோரிக்கைகளை நாம் முன்னெடுத்து செல்ல இருக்கிறோம்.
இறுதியில் சென்னை வந்து அடையும் போது, ஒரு மிகப்பெரிய மாநாட்டின் மூலமாக இந்திய தேசத்துக்கு ஒரு அறைகூவல் விடுக்கப்படும். அந்த அறைகூவல் இந்த கோரிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.