தமிழகம்

“எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு

வெற்றி மயிலோன்

சென்னை: “இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார் விஜய்.

          

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்த வந்தவர்கள் என சொல்லுவார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்காதவராக, சட்டவிரோத மணல் குவாரி வைத்திருக்காதவராக, கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் தாக்காதவராக இருக்க வேண்டும்.

எனவே, மக்களுடன் நிற்கும் வேட்பாளர்களை நான் தேர்ந்தெடுத்து உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. அது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி. எனவே உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்.

இது பாமரர்களுக்கும், ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் அடிமைகளுக்கும் நடக்கும் தேர்தல். இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

இளைஞர்களுக்காக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறேன். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற சமூக காவல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மன்றம் உருவாக்கப்படும். கல்லூரி படிப்புக்கு ரூ.20 லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்த நிலையான ஆள்சேர்ப்பு அட்டவணை உருவாக்கப்படும். 25 வயதுக்கு மேலும் வேலைவாய்ப்பு கிடைப்பது தாமதமானால் பட்டபடிப்பு படித்தோருக்கு மாதந்தோறும் ரூ.4000 மற்றும் டிப்ளமோ படித்தோருக்கு ரூ.2500 வழங்கப்படும். இளைஞரை தொழில்முனைவோர்களாக உருவாக்க ரூ.25 லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழகத்தை சேர்ந்தவருக்கே பணி வழங்க, தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இளைஞர்களின் பிரச்சினை குறித்து அரசுக்கு தெரிவிக்க இளைஞர் ஆலோசனைக்குழு அமைக்கப்படும். இந்த தேர்தல் நான்கு முனைப் போட்டி இல்லை. இத்தேர்தல் இரு முனைப் போட்டிதான். இது மக்கள் விரோத திமுகவுக்கும், மக்கள் ஆதரவு பெற்ற தவெகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என்றார்.

SCROLL FOR NEXT