மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி கடந்த டிச.4-ல் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், பிற மேல்முறையீட்டு மனுக்களுக்கு வழக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அரசு தரப்பு: தனி நீதிபதி முன்பு உள்ள அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
மனுதாரர் தரப்பு: டிச.4-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மட்டுமே அமர்வு தடை விதித்துள்ளது.
நீதிபதி: முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தடை உத்தரவில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், ஏப்.8 வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பு: அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து தொடரப்பட்ட ஒரு உரிமையியல் மற்றும் இதர மனுக்களுக்கும் பொதுவான இடைக்காலத் தடை பொருந்தும். மனுவில் கோரப்பட்ட கோரிக்கைகள் குறித்து பதிவுத் துறையிடம் விளக்கம் கேட்டால் குழப்பத்தை தவிர்க்கலாம்.
நீதிபதி: அமர்வில் என்ன கேட்டீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?
அரசு தரப்பு: பதிவுத் துறையிடம் அறிக்கை கேட்கலாம்.
நீதிபதி: அது என் வேலையல்ல, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால உத்தரவின்படியே செயல்படுவேன். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவுக்குக் கீழ்ப்படிவது என் கடமை. உங்களைப் போல் அல்லாமல் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை அளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. இவ்வளவு பிடிவாதமாக இருக்கக் கூடாது. எனக்கு எதிராக உங்கள் எதிர்ப்பைக் காட்டாதீர்கள்.
அரசு தரப்பு: அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?
நீதிபதி: காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா, சட்டப்படி அவர்களைக் கையாள்வேன். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் மேல்முறையீடு செய்தனர். அதை தள்ளுபடி செய்து டிச.4-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மீறப்பட்டது வேண்டும் என்றே செய்யப்பட்டதா, இல்லையா என்பதை ஆய்வு செய்வது தனி நீதிபதியின் பொறுப்பு என அமர்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவும், நேற்று முன்தினம் அமர்வு பிறப்பித்த இடைக்காலத் தடையும் முரண்பட வாய்ப்பில்லை.
எனவே, முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம். விசாரணை ஏப்.9-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.