அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: கரூர் சம்பவத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி. ஆனால், அந்த சம்பவத்தைப் பற்றி அவர் பொய்யும், புரட்டுமாக பேசிவருகிறார். அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்.
கரூர் எம்எல்ஏவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். தற்போது ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. எனவே, தொகுதி மக்கள் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் இவ்வாறு பேசியுள்ளார்.
கரூர் சம்பவத்தின்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை அனைவருமே பாராட்டினர். விஜய்யைப் போல் முகத்தை மூடிக்கொண்டு ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவில்லை.
அன்று மக்களோடு துணைநின்று, உயிர்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே மேற்கொண்டவர் ஸ்டாலின் என்பதை தமிழகம் மறந்திருக்காது. கரூர் வழக்கை விசாரிப்பதற்கு எஸ்ஐடி அமைத்து அதன் தலைவராக யாரை நாங்கள் நியமனம் செய்தோமோ அதே காவல்துறை அதிகாரியைத்தான் தற்போது உளவுத்துறை ஐஜியாக நியமித்துள்ளனர்.
எனவே, நடுநிலையோடுதான் கடந்த திமுக அரசு நடந்துகொண்டது என்பதற்கு இதுவே சாட்சி. இந்த விவகாரதத்தில் முக்கிய குற்றவாளியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சேர்க்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
அதை சீர்குலைக்கும் வகையில் ஆதவ் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். அதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.
இவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது கேரளாவில் ரூ.928 கோடிக்கு லாட்டரி ஊழல் வழக்கு நடந்துவருகிறது. எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணன் கைது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை நிச்சயமாக சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.
இந்த ஆட்சி எத்தனை நாளுக்கு என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எவ்வித ஆக்கப்பூர்வமான பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. தினமும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் கவனிப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.