முதல்வர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ள பரபரப்பான சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாக கூறப்படுவதாவது: ‘நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளன. எனவே, அவர்களின் எந்த ட்ராப்பில் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளேன்.
நமது ஆட்சிக்கு எதிராக பல்வேறு தவறான, அவதூறு செய்திகளை பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களுக்கு நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த விதத்திலும் இடம் தந்துவிடக் கூடாது.
உங்களை யாராவது பணி செய்யவிடாமல் தடுத்தால் அதனை என் கவனத்துக்கு கொண்டுவாருங்கள். உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணி தான் அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக ஆக்கும். உங்கள் தொகுதி தொடர்பாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக என்னை நேரில் வந்து சந்திக்கலாம். என்னை நேரில் சந்திப்பதை யாராவது தடுத்தாலும் அது குறித்தும் என்னிடம் சொல்லுங்கள்’ என்றார்.
மேலும், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டு வேட்டி, பட்டு புடவை ஆகியவற்றை முதல்வர் விஜய் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் முதலில் பெண் எம்எல்ஏக்களிடம் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் பலரிடமும் குழுவாகவும், தனித்தனியாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் பேரவைத் துணைத் ரவிசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் அருள் விக்னேஷ்தான் இந்த கூட்டத்திலிருந்து கடைசியாக புறப்பட்டுச் சென்றார். இவர்கள் மீது கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
பின்னணி என்ன? - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய், உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் தனது பகுதியில் ஒரு வாரமாகக் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை எனவும், குப்பைகள் அகற்றப்படவில்லை என முறையிட்ட போது, அவரை ரவிசங்கர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி விரட்டியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கே சென்று பிரச்சினை செய்ததாகவும், இதன் காரணமாக ஆட்சியர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த 2 விவகாரங்களும் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளன.