சென்னை: சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களுடன் நுழைவு வாயில்கள் கட்ட ரூ.268.80 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ. தொலைவுக்கு 3-வது வழித்தட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை கட்டுவதற்கு ரூ.268.80 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி துரைப்பாக்கத்தில் 3 அடுக்கு அடித்தளம், தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. சோழிங்கநல்லூரில் அடித்தளம் மற்றும் 8 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
மேலும் வழித்தடம் 3 மற்றும் வழித்தடம் 5-க்கு இடையே இணைப்புப் பாதை உடன் சோழிங்கநல்லூர் வணிகக் கட்டிடத்தின் வழியாகச் செல்ல முடியும். இதன் மூலம் வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல முடியும்.
இந்தக் கட்டுமானப் பணிகள் மெட்ரோ பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பயணக் கட்டணத்தை தவிர்த்த வருவாயை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் (Bridge and Roof) நிறுவனத்துக்கு ரூ.268.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் டி.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மந்தைவெளி வளாகம்: இதேபோல இந்த வழித்தடத்தில் உள்ள மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மந்தைவெளி பேருந்து பணிமனை ஆகியவற்றை இணைக்கும் விதமாக மந்தைவெளி பணிமனையை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தவும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறுவனத்துக்கு ரூ.167.08 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 29,385 சதுர மீட்டர் பரப்பளவில் 2 கட்டிடங்கள் கட்டப்படும். ஒவ்வொரு கட்டிடமும் 2 அடுக்கு அடித்தளம், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும். இங்கு பேருந்துகளில் பயணிகள் ஏறி இறக்குவதற்கான வசதிகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.