தமிழகம்

தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி

அனலி

சென்னை: தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்டப்​பேர​வை​யில் இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். பின்னர், விவாதம் தொடங்கியது.

முதல்வர் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் உரையாற்றிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.

அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.

பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.

SCROLL FOR NEXT