தமிழகம்

“எங்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும்” - திமுகவை எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர்

செய்திப்பிரிவு

“அதிகார மமதையில் திமுக மாவட்டச் செயலாளர் உள்ளார். ‘கூட்டணிக்கு ஜே... வந்தே மாதரம்’ எனச் சொல்பவர்கள் மட்டும் காங்கிரஸ்காரர்கள் கிடையாது. எங்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும்” என காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடாவான மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாணிக்கம் தாகூர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

          

திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். மூன்றாவது நபர் இல்லாமல் இருவர் மட்டுமே பேசியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் இருவரும் சொன்னால் தான் வெளியில் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கார்கே அமைத்த குழு மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதுதொடர்பாக கார்கேயைச் சந்தித்து மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என வலியுறுத்தினேன். காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்தினார்களோ, இழிவாக பேசினார்களோ அவர்களிடம் எந்த தயவு தாட்சண்யமும் பார்க்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தொண்டர்களுக்கும் தன்மானம் முக்கியம். காங்கிஸ் கட்சியையோ தொண்டர்களையோ இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவமானப்படுத்திய திமுக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்குரிய பதிலை எதிர்பார்த்துள்ளோம்.

எனக்கும், சகோதரி ஜோதிமணிக்கும் சீட் கொடுப்பது ராகுல் காந்தியின் முடிவு. அதில் இவர்கள் தலையிட முடியாது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு பூத்தில் ஆளில்லை, வார்டில் தேர்தல் பணிக்கு ஆளில்லை என்ற வன்மப் பேச்சை கடுமையாக எதிர்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் இண்டியா கூட்டணி என்பது பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது. தமிழக முதல்வர் வேறு பெயரில் சொல்லியிருந்தால் அவரிடம் தான் கேட்க வேண்டும். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என இளைஞர் காங்கிரஸார் தான் சுவரொட்டி ஒட்டினர். தன்மானமுள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை பாராட்டுகிறேன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

அதிகார மமதையில் மதுரை திமுக மாவட்டச் செயலாளர் உள்ளார். திருமங்கலம் அருகே கல்லணையில், கல்குவாரிகளை நிறுத்த வேண்டும் என அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அங்கு என்னென்ன விதிமீறல்கள் செய்தார்கள், அதில் யார் உள்ளனர் என ஊருக்கே தெரியும். மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள தொகுதி. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிட்டது. பிப்.13-ம் தேதிக்குப் பிறகு அங்கே வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி எங்களது பலத்தைக் காட்டுவோம். சும்மா பார்த்துவிட்டுப் போய்விடுவோம்... அப்படியே விட்டுவிடுவோம் என நினைக்கிறீர்களா? காங்கிரஸ் கட்சியினர் கூட்டணிக்கு ஜே... வந்தேமாதரம் எனச் சொல்பவர்கள் மட்டும் கிடையாது. அவர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT