எங்கு போனாலும் ரீல்ஸ்... அதகளம் செய்யும் அறிவிக்கப்படாத ‘வேட்பாளர்கள்’

எங்கு போனாலும் ரீல்ஸ்... அதகளம் செய்யும் அறிவிக்கப்படாத ‘வேட்பாளர்கள்’
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் கனவில் இருப்பவர்கள் பலரையும் இப்போது ரீல்ஸ் மோகம் தொற்றிக் கொண்டுள்ளது. தலைமையின் கவனத்தை ஈர்க்கவும், சமூக ஊடகங்கள் வழியாக வாக்காளர்களைக் கவரவும் இந்த உத்தியை கையாள்கின்றனர்.

பழுதடைந்த சாலைகள், அரசு கட்டிடங்கள், பயணியர் நிழற்குடைகள், பாலங்கள் என மக்கள் அன்றாடம் வந்துசெல்லும் பகுதிகளுக்கு கேமரா மேன்கள் புடைசூழ தங்கள் ஆதரவாளர்களுடன் செல்லும் இந்த அறிவிக்கப்படாத ‘வேட்பாளர்கள்’, அவற்றைப் பார்வையிடுவது, மக்களிடம் குறைகளைக் கேட்பது போன்று வீடியோ ஷூட் எடுத்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.

விபத்தில் சிக்குவோரை மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று பார்த்து பரிதாபப்படுவது போன்ற ‘காட்சிகளில்’ அசல் நடிகர்களே இவர்களிடம் நகலாகி விடுகிறார்கள். தாங்கள் எடுக்கும் வீடியோக்களை தகுந்த பின்னணிப் பாடல் மற்றும் வசனங்களுடன் கலந்து சமூக வலைதளங்களில் சுடச்சுட ரீல்ஸ்களாக சுற்றவிட்டு லைக்குகளை எண்ணிப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ‘படமெடுத்து’ ஓட்டுவதற்காக லட்சங்களில் சம்பளம் கொடுத்து ஆட்களைப் பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லையைச் சேர்ந்த ஆளும் கட்சி விஐபி ஒருவர், “அட, பிரபலமான மனிதர்கள், ஏற்கெனவே போட்டியிட்டு மக்களைச் சந்தித்த முகங்கள் ரீல்ஸ் போட்டாக்கூட பரவாயில்லை; பாத்துட்டுப் போகலாம். ஆனா, கிராமப் பஞ்சாயத்துல கவுன்சிலரா இருக்கிறவங்களும், வட்டச் செயலாளர் ரேஞ்சில் இருக்கவங்களும், கையில கொஞ்சம் காசு பணம் வெச்சிருக்கவங்களும் கண்டபடி இப்படி ரீல்ஸ் போடுறதத்தான் சகிச்சுக்க முடியல. முக்கிய கட்சிகள் பலவும் தங்கள் கட்சியில் யாருக்கு செல்வாக்கு இருக்குன்னு தனியார் ஏஜென்சிகள் மூலமா சர்வே எடுக்கிறாங்க. அதனால பலரையும் இந்த ரீல்ஸ் மோகம் படுத்தி எடுக்குது” என்றார்.

இந்த கூத்துகள் ஒருபுறமிருக்க, தங்களின் சாதனைகள் குறித்தும் எதிர்த் தரப்பின் சோதனைகள் குறித்தும் தினம் ஒரு வீடியோவை வெளியிடும் வேலையை ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாவட்ட வாரியாக யூடியூப் சேனல்களிடம் ஒப்படைத்துள்ளன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய யூடியூப் சேனல் நிர்வாகி ஒருவர், “இந்தத் தேர்தலில் சமூக ஊடகப் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இரண்டு கட்சிகளுமே புரிந்து வைத்துள்ளன. அதனால் லட்சங்களில் சந்தாதாரர்கள், பார்வையாளர்களை வைத்துள்ள யூடியூப் சேனல்களை போட்டி போட்டுக்கொண்டு பல லட்சங்களை கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர். இவர்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்ப ஏஐ தொழில்நுட்பத்தையும் கையாண்டு பலரும் பலவிதமாக பதிவுகளை தங்கள் யூடியூப் சேனல்களில் சகட்டுமேனிக்கு வெளியிட்டு வருகிறார்கள். இந்த வலைப் பின்னலில் பிரபல மீடியாக்களின் யூடியூப் சேனல்களுக்கும் விலை பேசி, பிரச்சாரத்தை லைவ் போடவும், கட்சி சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிடவும் பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். போகப் போக, உண்மை எது பொய் எது என தெரியாத அளவுக்கு இவர்கள் மக்களைக் குழப்பி விடுவார்கள் போலிருக்கிறது” என்றார்.

எங்கு போனாலும் ரீல்ஸ்... அதகளம் செய்யும் அறிவிக்கப்படாத ‘வேட்பாளர்கள்’
ஆஸி. ஓபனில் 11-வது முறையாக இறுதிக்கு முன்னேறி ஜோகோவிச் சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in