“ஆட்சியில் பங்கு என்பது பற்றி எல்லாம் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என்று அடக்கி வாசிக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், “இம்முறை எம்எல்ஏ பதவியுடன் திருப்தி அடையாது காங்கிரஸ்” என்று ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் செ.ராஜேஷ்குமார். ‘இந்து தமிழ் திசை’க்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.
பெரும்பாலும் தென் மாவட்டங்களில் தான் காங்கிரஸ் வெற்றிகளைக் குவிக்கும். விஜய் வருகை, நயினார் அரசியல் இதையெல்லாம் தாண்டி இம்முறையும் தெற்கில் காங்கிரஸுக்கு பழைய வெற்றியே கிடைக்கும் என நம்புகிறீர்களா?
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வலிமையான நிலையில் இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து இந்தப் பகுதிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆகவே இங்கு, பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு நிச்சயம் இல்லை.
எஸ்ஐஆருக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் காங்கிரஸ் புறக்கணித்தது ஏன்?
ஆர்ப்பாட்டம் தொடர்பான பேனரில் பெருந்தலைவர் காமராஜர் படம் இல்லை என்பதால் அதில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜரைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது.
கூடுதல் இடங்கள், அதிகாரத்தில் பங்கு என்ற உங்களின் கோரிக்கையை திமுக ஏற்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பதை நாங்கள் வலியுறுத்துவது காங்கிரஸ் தலைமையிடமே தவிர, திமுக தலைமையிடம் அல்ல. 1967-ல் ஆட்சியை இழந்து 58 ஆண்டுகள் ஆன நிலையில், காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப்பெரிய அளவில் சோர்வு இருக்கிறது. எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில்தான் இக்கோரிக்கை எழுகிறது. ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் தலைமை திமுக தலைமையிடம் பேசி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
திமுக மைனாரிட்டி அரசாக இருந்தபோதுகூட எழாத ‘ஆட்சியில் பங்கு’ கோஷம் இப்போது தீவிரமாக ஒலிக்க என்ன காரணம்?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நல்லிணக்கத்துக்காக, தேசிய நலன் கருதி, 2006-ல் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்காமல் காங்கிரஸ் தலைமை தவிர்த்தது.
தமிழகத்தில் எப்போதுதான் காமராஜர் ஆட்சி அமையும்... அப்படி அமைக்க முடியாமல் இருப்பதற்கு எது தடையாக உள்ளது?
காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைப்பது என்பது காங்கிரஸ் கட்சியினரின் நீண்டகால கனவு. அந்தக் கனவு மெய்பட 1989-ல் அமரர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட தீவிர பரப்புரையின் காரணமாக, 20 சதவீத வாக்குகளைப் பெற்று 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். கட்சியைப் பலப்படுத்தி மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொண்டு எங்கள் லட்சியத்தை அடையப் பாடுபடுவோம்.
தமிழக காங்கிரஸின் பலம் மற்றும் பலவீனமாக எதைக் கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் உயிரோட்டமுள்ள, வெற்றியை நிர்ணயிக்கும் இயக்கமாக இன்றைக்கும் காங்கிரஸ் கட்சி இருப்பதைப் பலமாகக் கருதுகிறோம். ஆனால், தொடர்ந்து கூட்டணியில் இருப்பதால், தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றாலும், கொள்கை ரீதியாகத் தனித்தன்மையுடன் செயல்பட்டு காங்கிரஸை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்த முடியவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு என்ன மதிப்பீடு தருவீர்கள்?
திமுக ஆட்சியை பொறுத்தவரை, கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். எனவே, திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 80 மதிப்பெண்கள் அளிக்க விரும்புகிறேன்.
ஆளும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மக்களுக்காக என்ன செய்தது என்று தேர்தலில் மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதால் மதவாத பாஜக காலூன்ற முடியாத நிலையை ஏற்படுத்தி யிருக்கிறோம். அமித் ஷா - ஆர்.என்.ரவி கூட்டணி தமிழகத்தில் பாஜகவை வளர்க்க எடுக்கும் முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில் வகுப்புவாத, பாசிச சக்திகள் எந்தக் காலத்திலும் காலூன்ற முடியாது.
நீட் தேர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட திமுக தந்த இன்னும் பல வாக்குறுதிகள் இன்னும் தொங்கலில் இருக்கிறதே..?
நீட் தேர்வு ரத்துக்காக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், பிறகு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்து நிரந்தரமாக முடக்கி வைத்திருக்கிறார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூடுதலான நிதி தேவைப்படுகிறது. எனினும் அதற்கான குழுவைத் தமிழக அரசு நியமித்திருக்கிறது. அதிமுக ஆட்சி வைத்துவிட்டுப் போன ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையோடு தான் திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மற்றபடி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற உறுதி தமிழக முதல்வரிடம் இருக்கிறது.