தமிழகம்

“பாஜக தலைவர் போல புதுச்சேரி ஆளுநர் செயல்படுகிறார்” - வைத்திலிங்கம் எம்.பி

அ.முன்னடியான்

புதுச்சேரி: பாஜக தலைவர் போல புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயல்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜக - என்.ஆர் காங்கிரஸ் அரசு மக்கள் நம்பிக்கையை இழக்கும் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர், காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை என குற்றச்சாட்டி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாயத்து தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால், 5 ஆண்டுகள் கடந்துவிட்டது, 2-வது முறையும் அவர்கள் அரசு வந்திருக்கிறது.

அன்று என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு இன்று பாஜக - என்.ஆர். காங்கிரஸ் அரசு என மாறியுள்ளது. அதைத் தவிர வேறு எந்தவித மாற்றமும் இல்லை.

இந்த பட்ஜெட் மக்களுக்கு முழுமையான ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை.

தேர்தலுக்கு முன் முதல்வர் 5,000 பேருக்கு வேலை கொடுத்தோம் என கூறினார். ஆனால், ஆளுநர் உரையில் 4,100 பேருக்கு தான் வேலை கொடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறார். அந்த 4,100 பேரில் எத்தனை பேர் ஒப்பந்தம் மற்றும் நேரடி வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டனர் என்று சொல்லவில்லை.

சுதந்திர தின உரையில் பிரதமர் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். ஆனால், பட்ஜெட்டில் அதைப்பற்றிய ஒரு வார்த்தை கூட இல்லை. இதுபோல் இருந்தால் இளைஞர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்.

ரூ.1,000 கோடிக்கு சாலை வசதிகள் மேம்படுத்தி மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இப்போது, ரூ.430 கோடியாக சுருங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக மேம்பாலம் அமைக்கும் திட்டமானது ரூ.430 கோடி அளவுக்கு குறைந்து வந்திருக்கிறது. மீதமுள்ள ரூ.500 கோடிக்கு என்ன திட்டம்?

மேம்பாலம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி ஓராண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்தவிதமான பணிகளும் தொடங்கப்படவில்லை. விமான நிலையம் வருகின்றது என்று சொல்லிட்டு இருங்காங்க, ஒருவர் சட்டப்பேரவை வருகிறது என்று சொல்லி வந்தார். இப்போது அவரே போய்விட்டார்.

அதுபோல தான் விமான நிலையம் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் விமான நிலையத்தை காணோம். யாருக்கும் பயன்படாத ஒரு ஏமாற்று பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு என சொல்ல வேண்டாம். பாஜக நமச்சிவாயம் அரசு என சொல்ல வேண்டும்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியது அனைத்தும் பாஜக அறிக்கைதான். புதுச்சேரியில் நமச்சிவாயம் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கிறது. உள்ளாட்சித் துறை என்று சொல்லிவிட்டு, அவர்கள் கேட்ட உள்துறைதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த நேரத்தில் கணக்கு தீர்க்க வேண்டும் என்று சொன்னார். நமச்சிவாயம் நன்றாக கணக்கு தீர்த்து இருக்கிறார்.

புதுச்சேரியில் பாஜக தலைமை அலுவலகம் இந்திராகாந்தி சதுக்கம் அருகே இல்லை. கடற்கரையோரத்தில் தான் இருக்குகிறது. பாஜகவின் தலைவர் இப்போது இருப்பவர் இல்லை. ஆளுநர் தான் பாஜக தலைவர் போல செயல்படுகிறார்” என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT