காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

 
தமிழகம்

தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: காங். எம்.பி ஜோதிமணி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியது என்றும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பெண் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இவை உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒரு பெண், தனது அறிவு, திறமை, உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும், இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.

தமிழகத்தில் உள்ள ஆட்சியர்களில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு, திறமை, நிர்வாகத்திறன் மீது முதல்வருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது.

ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT