

தாகா: வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம் பலாஷ்பாரி என்ற இடத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து வங்கதேச சிறுபான்மையின அமைப்புகள் தாகாவில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் முன்பாக நேற்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமர் சிலை கட்டுவதை தடுக்கவே இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகச் சிறுபான்மையின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கதேசத்தில் இந்து - பவுத்த - கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் இந்த போராட்டத்தை நடத்தியது. இதில் பல சிறுபான்மையின தலைவர்கள் கலந்து கொண்டு, ஹரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மணீந்திர குமார் நாத் கூறுகையில், “ராமர் சிலை அமைத்ததற்காக ஹரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளும், அநியாய கைதுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட அத்துமீறல்கள் நடந்துள்ளன. கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன” என்றார். இதற்கிடையில், ஹரிதாஸ் ரூ.9.35 கோடியை சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது. அவர் 2010-ல் இந்தியாவுக்குச் சென்றதாகவும், பின்னர் 2019-ல் மதம் மாறியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டம் வெடித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகளை ஒடுக்கி, சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.