சென்னை கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விருதாளர்கள்.
சென்னை: சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார்.
சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் விஜய் வழங்கினார். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு ரூ.10 லட்சம் விருது தொகை, சான்றிதழுடன் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
கலாம், கல்பனா சாவ்லா விருது: சர்க்கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் வி.மோகனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதும், நவுஷீன் பானு சந்த்துக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நல்ஆளுமை விருதுகள்: பின்னர், பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு முதல்வரின் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், குழந்தைப் பருவத்தில் காணப்படும் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து, ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு, மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிச் சேவைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு, எடை குறைந்த செயற்கை உறுப்புகளை தயாரித்ததற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை டீன் எம்.கீதாஞ்சலி ஆகியோருக்கு நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் நலன்: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த வகையில் சிறந்த மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ்குமார் (கிருஷ்ணகிரி), சிறந்த மருத்துவராக சென்னையைச் சேர்ந்த ப.திருநாவுக்கரசு, சிறந்த நிறுவனமாக திண்டிவனத்தைச் சேர்ந்த சிருஷ்டி பவுண்டேஷன், சிறந்த சமூகப் பணியாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த பா.மணிமாறன், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனமாக திருப்பூர் எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் மற்றும் சிறந்த கூட்டுறவு வங்கியாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருதுகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
உள்ளாட்சிக்கான விருதுகள்: சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் பிரிவில், சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக 6-வது மண்டலம் (திரு.வி.க. நகர்), 2-வது மண்டலம் (மணலி) ஆகியவை முதல் 2 பரிசுகளைப் பெற்றன. சிறந்த மாநகராட்சி பிரிவில் கோவை, தஞ்சை முதல் 2 பரிசுகளைப் பெற்றன. சிறந்த நகராட்சியாக போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரம் முதல் 3 பரிசுகளையும், சிறந்த பேரூராட்சியாக திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையம் 3 பரிசுகளையும் வென்றன.
மகளிர் நலன், இளைஞர் விருது: மகளிர் நலனுக்காகப் பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது ஓசூரைச் சேர்ந்த ராதாவுக்கும், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது ஈரோடு அட்சயம் டிரஸ்ட்டுக்கும் வழங்கப்பட்டது.
இளைஞர்களுக்கான முதல்வர் விருதில் ஆண்கள் பிரிவில் திருப்பூர் இம்மானுவேல் நெல்சன் ஏசா, தூத்துக்குடி ஏ.சரவணகுமார், சேலம் நிர்மல் கதிர்வேல், பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தா ஆகியோருக்கு முதல்வர் விஜய் விருது வழங்கினார்.