

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசியக் கொடியேற்றி வைத்தார்.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழகம், புதுச்சேரியி்ல் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 80-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டதும், தேசிய கீதத்துடன் விழா நிறைவடையும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி 2 நாட்கள் முன்பு சுற்றறிக்கை பிறப்பித்தார்.
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டு, அதன்பிறகு மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்படும். தேசிய கீதத்துடன் விழா நிறைவடையும் என தலைமைப் பதிவாளர் நேற்று முன்தினம் மாலை மற்றொரு சுற்றறிக்கை பிறப்பித்தார்.
அதன்படி, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டு, அதன்பிறகு வந்தே மாதரம் பாடப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசியக்கொடியேற்றி வைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விருதுகள், கேடயங்கள்: சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள், கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி, லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், முப்படை தளபதிகள், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி தலைமையில் பதிவாளர்கள், நீதித்துறை அலுவலர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பார் கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினர்களான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் இணைந்து தேசியக்கொடி ஏற்றினர். அமைச்சர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பார் கவுன்சில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.கார்த்திகேயன், ஜி.மோகன கிருஷ்ணன், டி. மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பிற வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.