தமிழகம்

கிரிஷ் சோடங்கருக்குப் பதிலாக கே.சி.வேணுகோபால்: மாற்ற நினைக்கிறதா... மாற்றி யோசிக்கிறதா காங்கிரஸ்?

வே.கோபாலகிருஷ்ணன்

இரண்டு தினங்களுக்கு முன்பு பிரவீன் சக்கரவர்த்தியையும் மாணிக்கம் தாகூரையும் தனியே அழைத்துப் பேசினார் ராகுல் காந்தி. இவர்கள் இருவரும் ‘அதிகாரத்தில் பங்கு’ கோஷத்தை முன்னெடுப்பவர்கள் என்பதால் இவர்களை ராகுல் அழைத்துப் பேசியது பல்வேறு ஊகங்கங்களை உலவவிட்டது. இனிமேல் இருவரும் அடக்கிவாசிக்கலாம் என்றும் சொல்லப்பட்ட நிலையில், மீண்டும், “அதிகாரப் பகிர்வு அவசியம்; ஆட்சியில் பங்கு எங்களின் உரிமை” என முழங்கி இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இதுபற்றி ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் பதில் சொல்லலாம் மற்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று சொன்னார். இதனிடையே, "தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது தற்போதைக்கு செட் ஆகாது என்பது எங்களுக்கும் தெரியும் அவர்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும்.

          

கூட்டணியை உடைக்கச் சிலர் போடும் சதித் திட்டத்தைப் பற்றி நானும் ராகுலும் கவலைப்படவில்லை. அரசியலைத் தாண்டி ராகுல் என்னை ஒரு மூத்த சகோதரராகப் பார்க்கிறார்; நானும் அவரை அப்படித்தான் கருதுகிறேன். அவர் என் குடும்பத்தில் ஒருவர்" என ஸ்டாலின் அளித்த 'சென்டிமென்ட்' பேட்டியும் இப்போது காங்கிரஸ் வட்டாரத்தை யோசிக்க வைத்திருக்கிறது. இந்தப் பேட்டிக்குப் பிறகு ராகுல் இறுக்கத்தைக் குறைத்துக் கொண்டு சற்று இறங்கி வந்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் சீனியர்கள் சிலர், "கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு என எங்கள் தரப்பில் திமுக-வுக்கு அழுத்தம் தரப்பட்டாலும் இன்னொரு கூட்டணிக்குப் போவது குறித்து நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அது தெரிந்து தான் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் நிதானம் காக்கிறார். காங்கிரஸ் தலைமையும் இந்த விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் தேசிய அளவில் காங்கிரஸுக்கு கைகொடுக்கும் நம்பிக்கையான தோழனாக திமுக இருப்பது தான்.

காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டால் தேசிய அரசியலில் இரண்டு கட்சிகளுக்குமே இழப்பு தான். இதையெல்லாம் ஒன்றுக்கு பலமுறை யோசித்த பிறகு, ஆட்சியில் பங்கு என்ற தமிழக காங்கிரஸாரின் கோரிக்கைக்கு “தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம்” என்ற ஒரு பதிலையாவது திமுக-விடம் காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது” என்றனர்.

இந்த நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தரப்பு ராகுலிடம், “காங்கிரஸுக்கு எப்படியும் 35 சீட்களுக்குக் குறையாமல் வாங்க வேண்டும். மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகள், வாரியங்கள் உள்ளிட்டவற்றில் காங்கிரஸுக்கான பங்கு குறித்தும் இப்போதே ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. அப்போதுதான் தமிழக காங்கிரஸாரை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த முடியும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாளை மறுநாள் (17-ம் தேதி) கே.சி. வேணுகோபால் தலைமையிலான டீம் சென்னைக்கு வருகிறது. கிரிஷ் சோடங்கர் தேவையற்ற குழப்பங்களை விளைவிப்பதாக திமுக தரப்பில் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், வேணுகோபாலை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறது காங்கிரஸ் தலைமை.

அன்றைய தினம் சென்னையில் நடக்கும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் கருத்துகளைக் கேட்கவிருக்கிறார் வேணுகோபால். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை ஒரு முடிவுக்கு வரலாம் என்பதே இப்போதைய நிலவரம். எனிமும் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் பிரிவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

SCROLL FOR NEXT