மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயணத் தொடக்க விழாவில் திமுக கூட்டணிக்கட்சியினர் பங்கேற்ற நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் விழாவைப் புறக்கணித்தது. விழா அழைப்பிதழில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையின் முக்கியக் குற்றவாளியான பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளது.
இதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதுடன், பதவிக்கே ஆபத்தாக முடியும் என்று செல்வப்பெருந்தகைக்கு முக்கியத் தலைவர்கள் அறிவுறுத்தியதால், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும், விழா மேடை மற்றும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் பிரபாகரன் படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “நடைபயண தொடக்க விழாவுக்கு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்ற அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தியின் ஆன்மா ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்குள்ளும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, இதுபோன்ற செயல்கள் விரும்பத்தக்கது அல்ல. அதனால், இந்த விழாவில் காங்கிரஸார் பங்கேற்கவில்லை” என்றார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறும்போது, “அழைப்பிதழில் பிரபாகரன் படம் இடம் பெற்றது குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரிடம் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவித்து நான் செல்போனில் பேசியபோது, ‘பிரபாகரன் படம் இடம் பெற்றது குறித்து இங்குள்ளவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு பேசுகிறார்கள்’ என்றேன்.
அதற்கு அவர், ‘அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் பணிகளைப் பாருங்கள்’ என்று கூறினார். செல்வப்பெருந்தகையால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வராதது குறித்து எனக்குத் தெரியவில்லை” என்றார்.