முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? - நாராயணசாமி பதில்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிலளித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரியில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் தேர்தல் முடிவு இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகதான் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் தோல்விக்கான பொறுப்பை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

முதல்வர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மோடியின் ஏஜென்டுகள் ஆளுநராக இருப்பதால் வந்தே மாதரம், தேசியக்கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு என்டிஏ அரசு செய்யும் துரோகம்.

புதுச்சேரியில் முதல்வர் மற்றும் இரு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் மூன்று அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்க வேண்டும். இதில் இழுபறி நீடிக்கிறது. பொதுவெளியில் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைக்கும் முன்பாகவே ஊழல் இருந்தால் இந்த ஆட்சி எப்படி இருக்கும். இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிபோகிறது.

அமைச்சர்கள் நியமனம் தாமதமாவதற்கு காரணம் என்ன என்று முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிடவேண்டும். தமிழக முதல்வர் விஜய்க்கு நண்பர் ரங்கசாமி. விஜய் பதவியேற்பில் ஊழல் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக பதவியேற்பில் தெரிவித்தார். அதேபோல் விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாணியில் செயல்படுவாரா?.

ஆரம்பமே கோணலாக அமைச்சர் பதவிக்கு ஏலம் போகிறது. புதுச்சேரிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் புதுச்சேரியில் அமைச்சராக கனவு காண்கின்றனர். பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வென்று, அமைச்சராகிவிட வேண்டும் என டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் காவடி தூக்குகிறார். தற்போது போதை மாநிலமாக இருக்கும் புதுச்சேரி சூதாட்ட மாநிலமாக மாறிவிடும் சூழல் உள்ளது” என்று கூறினார்.

தமிழகம் போல் புதுச்சேரியிலும் தவெக கூட்டணி அமைகிறதா என்று கேள்விக்கு, “புதுச்சேரியில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் அமர்ந்து பேசுவோம். இதுபற்றி, பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்துள்ளோம். அதன்பிறகு முடிவு எடுப்போம். தனிப்பட்ட நிலைப்பாடு எங்களுக்கு கிடையாது. கட்சியின் அகில இந்திய தலைமையே இதை முடிவு செய்யும்.

தமிழகத்தில் விஜய்க்கு ஆதரவு தந்துள்ளோம். பதவியேற்பில் ராகுல் பங்கேற்றார். காங்கிரஸுக்கும் தவெகவுக்கும் நல்ல நட்புறவு உண்டாகியுள்ளது. இதுபற்றி புதுச்சேரியில் வழிகாட்டுதல் குழுவும், கட்சியினர் கருத்தையும் கேட்டு முடிவு எடுப்போம்” என்றார்.

SCROLL FOR NEXT