மதுரை: காலில் ஈரசாக்கை போட்டு இரும்புக் கம்பியால் போலீஸார் அடித்து காலை உடைத்தனர் என மானாமதுரை இளைஞர், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவைச் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூறும்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் 80 கிலோ மீட்டர் சுற்றிச் செல்கின்றனர்.
மாணவர்கள் உள்ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வேண்டாம் என கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் கட்சியினர் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது என்றனர்.தொடர்ந்து நீதிபதி, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
இதை ஏற்க முடியாது என்றார். மனுதாரர் தரப்பில், நீதித்துறை நடுவரின் ரிமாண்ட் அறிக்கையில் ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது: சீருடையில் இல்லாத காவலர்கள் என்னையும், குணாவையும் பிடித்தனர்.
என் கண்களைக் கட்டி வேறு இடத்துக்கு அழைத்துச்சென்று எனது காலை கற்களுக்கு இடையில்வைத்து, ஈரச்சாக்கைப் போட்டு கம்பியால் அடித்து உடைத்தனர். பின்னர் மானா மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாலத்திலிருந்து தவறி விழுந்ததாகக் கூறுமாறு காவல்துறையினர் மிரட்டினர்.
கண்களைக் கட்டியதால் யார் அடித்தது என எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்தது உறுதியாகிறது. இருப்பினும் சரியான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர்தரப்பில் கூறப்பட்டது.
அரசுத் தரப்பில், ஆகாஷ் நீதித் துறை நடுவரிடம் கூறியது உண்ையா எனத் தெரியாது. சரியான சான்று கிடைத்தவுடன் வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் மறியலைக் கைவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, ஆகாஷ் இறப்புக்கான காரணம் குறித்து கேட்டபோது, ரசாயனப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். முடிவு வர 10 நாட்களாகும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
நீதிபதி, காவல் மரணங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப் பட வேண்டும். அழுத்தம் கொடுத்து, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நினைப்பது சரியானது அல்ல.
சாலை மறியலால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் பிரதமர், முதல்வர் வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்வது போல் மக்களுக்காகப் போக்குவரத்தை மாற்றம் செய்யலாமே என நீதிபதி கேட்டார்.
பின்னர் நீதிபதி கூறும்போது, உயிரிழந்த ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கையில் சிபிசிஐடி போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.
வழக்கறிஞர்கள் சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் பேச்சு நடத்தி நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். மறுத்தால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டி வரும். விசாரணை வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.