எம்.பி கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

 
தமிழகம்

பூரண மதுவிலக்கு தோல்வியடைந்த திட்டம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: ‘நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு என்பது தோல்வியடைந்த திட்டம்’ என சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.6.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை நேற்று திறந்துவைத்த அவர், பின்னர்செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு விரிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து விமர்சிக்கும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிஹாரில் ரூ.10 ஆயிரம் வழங்கியது குறித்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும்.

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு என்பது தோல்வி அடைந்த திட்டம். இந்த திட்டம் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. மதுவை கட்டுப்படுத்தலாமே தவிர, முழுமையாக தடை செய்ய முடியாது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு என்பது காகிதத்தில்தான் இருக்கிறது. காந்தி பிறந்த ஊரான போர்பந்தரிலேயே மது இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணம் மற்றொரு மாநிலத்துக்குப் பொருந்தாது. அந்தந்த மாநில கூட்டணி, அரசியல் நிலவரப்படிதான் தேர்தல் முடிவுகள் இருக்கும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தேர்தல் வரும்போது தமிழகத்துக்கு வருவார்கள்.

தமிழ் உணவு, தமிழ் மொழிதான் பிடிக்கும் என்பார்கள். புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தலுக்காக வந்துவிட்டு செல்வார்களே தவிர, அவர்களுக்கு தமிழகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT