தமிழகம்

ஆற்காடு தொகுதியில் அசத்தப் போவது யார்?

ப.தாமோதரன்

ஆற்காடு: முகலாய பேரரசர் ஹவுரங்கசீப்பால் கர்நாடக பகுதிகளில் வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் நவாப்புகள். இவர்கள், கர்நாடக நவாப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் ஆற்காட்டை தலைமையிடமாக கொண்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை நிர்வகிக்க தொடங்கினர்.

பிரெஞ்ச் படைகள் ஆற்காடு நவாப்பு களுக்கு பக்க பலமாக இருந்தனர். இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய கிழக்கிந்திய கம்பெனியின் போர் 1751-ல் ஆற்காட்டில் ராபர்ட் கிளைவ் தலைமையில் நடைபெற்றது. இந்த போரில் கிடைத்த மாபெரும் வெற்றியால் டெல்லியை நோக்கி கிழக்கிந்திய கம்பெனி முன்னேற முடிவானது.

அதை குறிக்கும் வகையில் பாலாற்றின் கரையில் இன்றும் உள்ள ‘டெல்லி கேட்’ வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான நெல் அரிசி அரவை ஆலைகள் அதிகம் உள்ளன.

நெசவு தொழில், சில பகுதியில் பீடி தொழிலாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். நாடு விடுதலை அடைந்த பிறகு 1951-1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தின் 147-வது தொகுதியாகவும், தற்போதைய தமிழ்நாட்டில் 42-வது சட்டப்பேரவை தொகுதியாகவும் ஆற்காடு உள்ளது.

ஆற்காடு நகரம் மற்றும் ஆற்காடு, திமிரி ஊராட்சி ஒன்றியங்களுடன், விளாப்பாக்கம், கலவை, திமிரி ஆகிய பேரூராட்சிகள், வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு சில கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. வன்னியர்கள், பட்டியலினத்தவர், முதலியார், நாயுடு சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர்கள் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர்.

நடைபெற உள்ள 2026 தேர்தலில் ஆற்காடு தொகுதியில் திமுக சார்பில் 3-வது முறையாக ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக சார்பில் எஸ்.எம். சுகுமார், நாதக சார்பில் அர்ச்சனா, தவெக வேட்பாளராக விஜய்மோகன் உட்பட மொத்தம் 14 பேர் களம் காண்கின்றனர். இருப்பினும், இந்த தேர்தல் திமுக – அதிமுகவுக்குமிடையே கடும் போட்டியாகவே காணப்படுகிறது.

தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஆற்காடு -ஆரணி சாலையில் நிலவி வந்த கடுமை யான போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழி சாலை திட்டம், ஆற்காடு நகர பேருந்து நிலையம் விரிவாக்கம், மேல் விஷாரத்தில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திமிரி புதிய பேருந்து நிலையம், வெள்ளைக்குளம், பென்னகர், வாழைப் பந்தல் பகுதிகளில் தடுப்பணைகள் என கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுகவின் வேட்பாளரான எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டையில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் தொகுதி மாறி ஆற்காட்டில் பாமகவின் பலத்துடன் போட்டியிடுகிறார். தவெக வேட்பாளர் விஜய்மோகன், நாதக வேட்பாளர் அர்ச்சனா இந்த தொகுதிக்கு புதியவர்கள் என்பதால் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது.

நீண்ட நாள் கோரிக்கைகள்

* விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் மணல் குவாரி அமைத்து மணல் எடுப்பதை தடுக்க வேண்டும்.

* திமிரியில் விவசாயத்துக்கு இடையூறாக உள்ள கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

* கிராமங்களுக்கு அரசு பேருந்து சேவை களை வழங்க வேண்டும்.

* கலவை பெரிய ஏரி உட்பட தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர் வார வேண்டும்.

* கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

* திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி கள் உள்ளதால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும்.

* கலவையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.

* ஆற்காடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முறையாக செயல்பட வேண்டும்.

ஆற்காட்டில் வென்றவர்கள்

  • 1951 - பஞ்சாட்சரம் - காங்கிரஸ்

  • 1957 - காதர் செரிப் - காங்கிரஸ்

  • 1962 - முனிரத்தினம் - திமுக

  • 1967 - ஆற்காடு வீராசாமி - திமுக

  • 1971 - ஆற்காடு வீராசாமி - திமுக

  • 1977 - உய்யகொண்டான் - அதிமுக

  • 1980 - சேதுராமன் - அதிமுக

  • 1984 - பழனி - அதிமுக

  • 1989 - கஜபதி - திமுக

  • 1991 - கோ.விசுவநாதன் - அதிமுக

  • 1996 - சுப்பிரமணி - திமுக

  • 2001 - நீலகண்டன் - அதிமுக

  • 2006 - இளவழகன் - பாமக

  • 2011 - சீனிவாசன் - அதிமுக

  • 2016 - ஈஸ்வரப்பன் - திமுக

  • 2021 - ஈஸ்வரப்பன் - திமுக

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,19,900

  • பெண் - 1,25,391

  • மூன்றாம் பாலினத்தவர் - 28

  • மொத்த வாக்காளர்கள் - 2,45,319

SCROLL FOR NEXT