சோழவந்தான் தொகுதியில் பிரச்சாரத்தின்போது திமுக வேட்பாளர் வெங்கடேசனை மலர் தூவி வரவேற்ற பெண்கள்.

 

 படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழகம்

சோழவந்தான் தொகுதியில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் போட்டி

என்.சன்னாசி

மதுரை: முன்னாள், இந்நாள் எம்எல்ஏ.க்கள் மோதுவதால் ‘சோழவந்தான் தொகுதி’ சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சோழவந்தான் தனி தொகுதியாகும். இது ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது. விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.

இத்தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக வெங்கடேசன் உள்ளார். இவர் அமைச்சர் பி.மூர்த்தியின் தீவிர ஆதரவாளர். இத்தொகுதியில் திமுக பிரமுகர்கள் சிலர் சீட் பெற முயற்சித்தனர். ஆனாலும், வெங்கடேசனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

          

இவரை எதிர்த்து, அதிமுக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் களமிறங்கியுள்ளார். கடந்த முறை போட்டியிட்டு தோல் வியை தழுவிய நிலையில், இவர் பாஜகவுக்கு தாவினார். சில மாதங்களிலேயே மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆர்.பி.உதயகுமாரின் விசுவாசியான இவருக்கே மீண்டும் அதிமுகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் தொகுதியில் திறந்தவேனில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் மாணிக்கம்.

ஆனால், மாணிக்கம் வெளி யூர்க்காரர் என்றும், தனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றும், இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், திடீரென தவெக கட்சியில் சேர்ந்து சோழவந்தான் தொகுதியில் சீட் பெற்று போட்டியிடுகிறார்.

திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வுக்கும், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் சூழலில், முன்னாள் எம்எல்ஏ கருப்பையா தவெக சார்பில் களத்தில் உள்ளதால், இத் தொகுதி சூடுபிடித்து வருகிறது.

மேலும், சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் என்பவர் ஏற்கெனவே அதிமுக, திமுகவில் சீட் பெற முயற்சித்து முடியாமல் போனதால், சசிகலா கட்சியில் இணைந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில், நாகலட்சுமி என்ற பெண் களத்தில் உள்ளார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் வெங்கடேசன் தொகுதியிலுள்ள வாவிடை மருதூரில் இருந்து கூட்டணி கட்சியினருடன் தனது பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதேநேரம், கூட்டணி கட்சியினருடன் திருவேடகம் பகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய அதிமுக வேட் பாளர் மாணிக்கம், குருவித் துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர்கள் கருப்பையா, பாலமுருகன், நாகலட்சுமி ஆகி யோர் தேர்தல் அலுவலகங்களை திறந்து தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT