சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அந்த திட்டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர் மரணமடைந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.கோவிந்தராஜன் அமர்வில் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது ஒருவித சலுகைதானே தவிர, அரசியல் சாசனத்தின்படி அமைந்த நியமனத் திட்டம் அல்ல. அதை உரிமையாகவும் கோர முடியாது. தகுதியற்றவர்களை கருணை அடிப்படையில் அரசுப் பணிகளில் நியமித்தால், திறமையற்ற அரசு நிர்வாகத்துக்கு வழிவகுக்கும்.
ஒரு அரசு ஊழியர் மரணமடைந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவும் ஏற்புடையது அல்ல என்பதால் அதை ரத்து செய்கிறோம். எனவே, தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அத்திட்டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.